அணு ஆயுத தயாரிப்பை அதிகரிப்போம்! அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

Report Print Kabilan in மத்திய கிழக்கு நாடுகள்

அணு ஒப்பந்த வரம்பை மீறி, யுரேனியம் செரிவூட்டல் அளவை அதிகப்படுத்த உள்ளோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத இயக்கங்களுக்கு ஈரான் உதவி செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பு ஈரான் உடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப், அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளையும் விதித்தார்.

இந்நிலையில் தான், ஓமன் வளைகுடாவில் கச்சா எண்ணெய் கொண்டு சென்ற 4 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல் கடந்த வாரமும், ஜப்பான் கப்பல் உட்பட 2 எண்ணெய் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரான் படையினர் ஜப்பான் எண்ணெய் கப்பல் அருகே வெடிக்காத கண்ணி வெடிகளை அகற்றி, ஆதாரத்தை அழிக்க முயலும் வீடியோ மற்றும் புகைப்படம் ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட்டது. இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி போர்க் கப்பலுடன் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்னும் 10 நாட்களில் அணு ஒப்பந்த வரம்பை மீறி, யுரேனியம் செரிவூட்டல் அளவை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஈரான், இதன்மூலம் அணு ஆயுத மூலப் பொருளை தயாரிப்போம் என மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அணுசக்தி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பெரோஸ் கமால்வாண்டி கூறுகையில், ‘நாட்டின் தேவைக்கு தகுந்தபடி யுரேனியம் செரிவூட்டல் அளவு அதிகரிக்கப்படும். இது 3.67 சதவிதத்தில் இருந்து எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, அமெரிக்காவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்ளதாக தெரிகிறது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers