ஈரானால் கைப்பற்றப்பட்ட கடத்தல் எண்ணெய் கப்பல் எந்த நாட்டிற்கு சொந்தமானது? அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

அரபு நாடுகளுக்கு ஈரான் எண்ணெயை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டால் கைப்பற்றிய வெளிநாட்டு கப்பல் எந்த நாட்டிற்கு சொந்தமானது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கப்பலில் சுமார் 70 ஆயிரம் லிட்டர் கடத்தல் எண்ணெய் மற்றும் 7 வெளிநாட்டு மாலுமிகள் இருந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாரசீக வளைகுடாவில் வைத்து நேற்று கைப்பற்றப்பட்ட கப்பல் ஈராக் நாட்டிற்கு சொந்தமானது என ஈரானிய புரட்சி காவல்படை அறிக்கை வெளியிட்டுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனையைத் தொடர்ந்தே ஃபார்ஸி தீவுக்கு அருகே எண்ணெயை கடத்திச்சென்ற கப்பலை ஈரான் கைப்பற்றியது. கைப்பற்றப்பட்ட கப்பல் தற்போது புஷெர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் சரக்கு புஷேர் மாகாணத்தின் தேசிய எண்ணெய் விநியோக நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் கடற்படை எப்போதும் எதற்கும் தயாராக உள்ளது, ஈரானின் தேசிய நலனைப் பாதுகாக்க எந்த முயற்சியையும் விடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த கப்பலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள ஈராக்கின் எண்ணெய் அமைச்சகம், ஈரானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும், அது சர்வதேச சந்தைக்கு டீசலை ஏற்றுமதி செய்யாது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்