அமெரிக்கா கண்ணில் மண்ணை தூவி மர்ம நபருக்கு எண்ணெய்யை விற்ற ஈரான்

Report Print Vijay Amburore in மத்திய கிழக்கு நாடுகள்

மேற்கத்திய நாடுகளுடனான பதட்டங்களுக்கு மத்தியில் மர்ம நபர் ஒருவருக்கு ஈரான் எண்ணெய்யை விற்பனை செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தடைகளை மீறி சிரியாவிற்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்வதாக ஈரான் கப்பலை ஜிப்ரால்டர் பொலிஸ் மற்றும் பிரித்தானிய சிறப்பு கடற்படை ஜூலை 4 ஆம் தேதி கைப்பற்றி ஆறு வாரங்கள் தடுத்து வைத்தது.

பின்னர் பிரித்தானிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நீதிமன்றம் ஆகஸ்ட் 15 ம் தேதி டேங்கரை விடுவிக்க உத்தரவிட்டது. அதன்பிறகு மூன்று நாட்கள் கழித்து முன்னர் கிரேஸ் 1 என்று பெயரிடப்பட்ட அட்ரியன் தர்யா 1, மத்திய தரைக்கடல் வழியாக 140 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள 2.1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்யை சுமந்து சென்றது.

ஆரம்பத்தில் கிரேக்கத்தின் கலாமாட்டா நோக்கி சென்ற கப்பல் தன்னுடைய இலக்கை மாற்றி துருக்கியின் மெர்சினுக்கு சென்றது.

இந்த நிலையில் ஈரான் செய்தி தொடர்பாளர் ரபீ, ஈரான் கப்பலில் இருந்த எண்ணெய்யை விற்பனை செய்துவிட்டதாகவும், அதனை வாங்கிய உரிமையாளர் கப்பலின் இலக்கை நிர்ணயிப்பார் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா உற்றுக்கவனித்து வந்தாலும் எண்ணெய் விற்பனையை தடுக்க முடியாது என ஏற்கனவே ஈரான் செய்தித்தொடர்பாளர் கூறியது போல தற்போது மர்ம நபருக்கு எண்ணெய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் விற்கப்பட்டது ஸ்பெயினின் தெற்கு முனையில் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் டேங்கர் தடுத்து வைக்கப்படுவதற்கு முன்பா அல்லது அதற்கு பின்னரா என்பது குறித்து அவர் கூறவில்லை.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்