கடல் தளத்தில் 14 மில்லியன் டன் நெகிழி கழிவுகள்! புவியின் எதிர்காலம் என்னவாகும்!?

Report Print Gokulan Gokulan in இயற்கை
773Shares

உலக கடல்களில் அடித்தளத்தில் மொத்தமாக 14 மில்லியன் டன் நெகிழி கழிவுகள் இருப்பதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவுஸ்திரேலியாவின் அரசாங்க அறிவியல் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ, அந்நாட்டின் தெற்கு கடற்கரையிலிருந்து 300 கி.மீ தூரத்தில் உள்ள ஆறு தொலைதூர இடங்களில் எடுக்கப்பட்ட கடல் தளத்தின் மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி செய்ததில் இந்த திடுக்கிடும் விவரங்களை தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் 51 மாதிரிகளைப் பரிசோதித்து பார்த்தபோது, தண்ணீரின் எடையைத் தவிர்த்து, ஒவ்வொரு கிராம் வண்டலிலும் சராசரியாக 1.26 நுண் நெகிழி துண்டுகள் (microplastic ) துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

நுண் நெகிழி துண்டுகள் 5 மிமீ அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்டவை மற்றும் பெரும்பாலும் பெரிய நெகிழி பொருட்கள் எப்போதும் சிறிய துண்டுகளாக உடைந்து விடுகின்றன.

14 மில்லியன் டன் நெகிழி என்பது தற்போது கடலின் மேற்பரப்பில் மிதக்கும் நெகிழிகளை விட 30 மடங்கு அதிகமானதாகும். கடலில் நெகிழி கொட்டப்படுவதை தவிர்ப்பது சர்வதேச நாடுகளிடையே பெரும் சவாலாக உருவாகியுள்ளது.

சி.எஸ்.ஐ.ஆர்.ஓவின் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானியும், ஃபிரான்டியர்ஸ் இன் மரைன் சயின்ஸ் இதழின் இணை ஆசிரியருமான டாக்டர் டெனிஸ் ஹார்டெஸ்டி, “இதுபோன்ற தொலைதூர இடத்திலும், அத்தகைய ஆழத்திலும் நுண் நெகிழி துண்டுகள் கிடைத்துள்ளது என்பது “நெகிழி எங்கும் நிறைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.” என்று கூறியுள்ளார்.

சயின்ஸ் இதழில் முந்தைய ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8.5 மில்லியன் டன் நெகிழிகள் கடலில் கொட்டப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. மற்றொரு ஆய்வு கடல் மேற்பரப்பில் 250,000 டன் நெகிழிகள் மிதப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் பல்லுயிர் இழப்பை தடுக்க ஒரு தன்னார்வ உறுதிமொழியில் கையெழுத்திட்டனர், இந்த உறுதிமொழியானது 2050 க்குள் கடலில் நெகிழிகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.

இந்த உறுதிமொழியில் அமெரிக்கா, பிரேசில், சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்