சிரித்தால் மட்டும் முகத்தைக் காட்டும் கண்ணாடி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிரித்தால் மட்டும் முகத்தைக் காட்டும் கண்ணாடியை, துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் புற்று நோயாளிகளுக்காக உருவாக்கியுள்ளார்.

டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கண்ணாடியில் கமெரா பொருத்தப்பட்டுள்ளது. முக உணர்ச்சிகளைக் கண்காணித்து, சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது. இதை வழக்கமான கண்ணாடி போலச் சுவரில் மாட்டலாம். மேஜையில் வைக்கலாம்.

இந்த சிறப்பு கண்ணாடியின் மதிப்பு 2000 டொலரில் இருந்து 3000 டொலர் வரை பல விதங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து பெர்க் இல்ஹான் கூறுகையில், “என் குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் வந்துவிட்டது. அதனால் அவரிடமிருந்த மகிழ்ச்சியும் சிரிப்பும் காணாமல் போய்விட்டன.

கண்ணாடி பார்ப்பதைக்கூட நிறுத்திவிட்டார். அப்போதுதான் அவர்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைக் கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகலாம்.

அல்லது மரணமாவது தள்ளிப்போகலாம். நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன்.

சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் பேசினேன்.

2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கியிருக்கிறேன். தற்போது இந்தக் கண்ணாடி தயாரிக்க அதிகம் செலவாகிறது.

மருத்துவமனைகளும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பவர்களும் இந்தக் கண்ணாடியை வாங்கிக்கொள்ளலாம்” என்கிறார் பெர்க் இல்ஹான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்