தங்கத்தின் பின்னால் இருக்கும் சோகக்கதை: கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தங்கத்தின் நிறத்தில் அந்தப் புழுதி எங்கும் பரவிக் கிடக்கிறது. அந்தச் சிறு குழந்தைகளின் முகங்களிலும் கூட அத்தனை தூசுப் படர்ந்திருக்கிறது. அங்கங்கு சிறு குழிகள்.

ஒவ்வொரு குழிகளின் அருகிலும் 10 பேர் வரை கூடியிருக்கிறார்கள். அனல் கொதிக்கிறது. அதில் பெரும்பாலானவர்களின் கால்களில் செருப்பு இல்லை. இந்த மக்களையும், இந்த நாட்டையும் நாம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறு நாடு " புர்கினா ஃபாசோ " ( Burkina Faso ). பல நூறு ஆண்டுகளாக ப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த நாடு. 1960யில் சுதந்திரம் அடைந்தது. இருந்தும் பிரான்ஸின் கைகள் இங்கு இன்றும் சற்று ஓங்கித்தான் இருக்கிறது.

பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் கதைதான் புர்கினா ஃபாசோவிலும். எல்லா வளங்களும் இருந்தும், வல்லரசு நாடுகளின் ஏமாற்று வேலைகளுக்குப் பலியாகி, துன்பப்படும் தேசத்தின் கதைதான் இங்கும்.

இங்கு இவர்கள் பலியானது... வல்லரசுகளின் தங்க ஆசைக்கு. இது எழுதி, கேட்டு, ஹாலிவுட் படமாக பார்த்து சலித்த கதைதான். ஆனால், இரண்டு தலைமுறைகளாகியும் எதாவது ஓர் ஆப்பிரிக்க நாடு இது போன்ற விஷயங்களுக்கு இரையாகிக் கொண்டுதானிருக்கிறது.

அந்தக் குழியின் ஆழம் 100 அடி வரை இருக்கும். அதனுள் ஒருவர் உள் புகுவதே சிரமம். ஆனால், நாள் முழுக்க அதற்குள், தங்கள் உயிரைப் பணையம் வைத்து இறங்கி வேலை செய்கிறார்கள். குறிப்பாக, 13 வயதிலிருந்தே சிறுவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பசியில் வாடி, ஒட்டியிருக்கும் உடம்பைக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்களால் எளிதில் அந்தக் குழிகளினுள் நுழைய முடியும் என்பதாலும், வறுமையைத் தீர்க்க வேறு வழி இல்லாததாலும் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பல சிறுவர்களும் முதலில் இறங்கும்போது, பெரும் பயம் கொள்கிறார்கள். மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

சரி... உயிரைப் பணையம் வைத்து தங்கத்தை எடுப்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களா என்று கேட்டால். அவர்கள் இன்னும் மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது வேதனையான யதார்த்தம். 100 அடி குழிக்குள் இறங்கி, அங்கிருக்கும் பாறைகளை உடைத்து கற்களை எடுத்து வருகிறார்கள்.

அதில் சில கற்களில் தங்கத் துகள்கள் இருக்கும். அது அத்தனை எளிதாக எல்லோர் கண்களுக்கும் அகப்படுவிடாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். அந்தக் கற்களை எடுத்து வந்து, தூள் தூளாக உடைத்து, தங்கத் துகள்களைப் பிரித்தெடுக்கிறார்கள். பின்னர், அதை சில செயல்முறைகளுக்கு உட்படுத்தி , அதை பாதரசத்தோடு கலக்கிறார்கள்.

இந்தச் செயல்முறை மிகவும் ஆபத்தான வகையிலிருக்கிறது. பாதரசத்தை, வெறும் கைகள் கொண்டு தங்கத்தோடு கலக்கிறார்கள். இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. பின்னர், கலந்த தங்கத்தை சூடாக்குகிறார்கள். அப்போது பாதரசம் உருகி , பிரிகிறது. இதை சூடு பண்ணும் போது வெளியேறும் புகை, கடுமையான நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

20 நாள்கள் வரைக் கடினமாக உழைத்தால் 5லிருந்து 10 கிராம் வரையிலான தங்கத்தை எடுக்க முடியும். இதை ஏஜென்டுகளிடம் கொடுத்து, அவர்கள் அதை உலகம் முழுக்க விற்பனை செய்வார்கள்.

இவ்வளவும் செய்தால் ஒரு நாளைக்குத் தோராயமாக 80 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, பலரும் தங்கள் குடும்பத்தோடு இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். பல குழந்தைகள் இதனால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

100 அடி ஆழத் தங்கச் சுரங்கத்தில் வெப்பம் 50டிகிரிக்கும் மேலாக இருக்கும். அந்த இருட்டில் உள் செல்ல மிகவும் பயமாக இருக்கும். உடல் கடுமையாக வலிக்கும். இதையெல்லாம் சமாளிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கிடக்கிறார்கள்.

குறிப்பாக சின்னஞ்சிறு சிறுவர்கள் கூட "ட்ரனடால்" (Tranadol) எனும் போதை மாத்திரையை உபயோகப்படுத்துகிறார்கள். 1.7 கோடி மக்கள் தொகைக் கொண்ட இந்த நாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 600க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன.

திடீர் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற அபாயங்களும் சுரங்கத்தில் அதிகம் இருக்கின்றன. எப்பொழுதும் புழுதியிலேயே உழன்று கிடப்பதால் இருமல், ஆஸ்துமா, மலேரியா, கல்லீரல் என உடல் ரீதியில் நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள்.

புர்கினா ஃபாசோவின் குடிமக்களின் சராசரி ஆயுள்காலம் 57 வருடங்களாக அரசாங்கக் கணக்கு சொல்கிறது. ஆனால், இந்தத் தங்கச் சுரங்கங்களில் வேலை செய்பவர்களின் சராசரி ஆயுள்கால 45 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தானிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

நீரும், காற்றும், நிலமும் மாசுபட்டு, வாழ்வும், வாழ்வியலும் சூறையாடப்பட்டு , தங்கள் மொத்த வாழ்வையும் இழந்து....உலகின் ஏதோ ஓர் மூலையில், முகம் தெரியாத யாரோ ஒருவர் தன் அலங்காரத்திற்காக போட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ள அவர்கள் இறக்கிறார்கள். அந்தத் தங்க நகைகளின் நிறம் கறுப்புதான் என்பதை எத்தனைப் பேர் உணர்ந்திருப்பார்கள்?

- Vikatan

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்