உலகில் இப்படியும் அதிசய குடும்பமா? வலியை உணர முடியாதாம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இத்தாலியில் குடும்பம் ஒன்று, தங்களுக்கு ஏற்படும் வலியை உணர முடிவதில்லை என்று தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்சிலி குடும்பம் இத்தாலியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வலியை உணரும் தன்மை கிடையாது.

இந்த குடும்பத்தின் 78 வயதான மூத்த பெண், அவருக்கு நடுத்தர வயதில் இரண்டு பெண்கள், அவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் என ஆறு பேருக்கும் இந்த பிரச்சனை உள்ளது.

இவர்களுக்கு அடிபட்டாலோ அல்லது தீக்காயம் ஏற்பட்டாலோ அந்த வலியை அவர்களால் உணர முடிவதில்லை. மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டாலும் கூட இவர்களால் உணர முடியாது.

இவர்களை சோதனை செய்த மருத்துவர் ஜேம்ஸ் காக்ஸ் கூறுகையில், ‘சில நேரங்களில் அவர்களால் வலியை உணர முடிகிறது. ஆனால், அந்த உணர்வு ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கிறது.

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த லெட்டிஸியா என்ற பெண், ஒருமுறை பனிச்சறுக்கு விளையாடிருக்கிறார். அப்போது அவரின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆனால், அதை அவர் உணரவே இல்லை. இயல்பாக வீட்டிற்குச் சென்று உறங்கிய அவருக்கு, மறுநாள் தான் அந்த விடயமே தெரிந்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் காக்ஸின் ஆராய்ச்சிக் குழு, இந்தக் குடும்பத்தினரின் மீது நடத்திய இதற்கான பரிசோதனையில், இதன் உண்மை தெரியவந்துள்ளது.

அதாவது, அவர்களின் உடல்நலன், தசைகள் மற்றும் நரம்புகளில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்களின் மரபணுவில் மிகப் பெரிய அளவில் மாற்றம் இருப்பது தெரிய வந்தது.

‘ZFHX2' என்ற மரபணு இந்த குடும்பத்தினருக்கு உள்ளது. இதுவே வலி உணராத் தன்மையை அவர்களுக்கு அளிக்கிறது. இதனைத் தொடர்ந்து, ’ZFHX2' மரபணு நீக்கப்பட்ட பரிசோதனை எலி ஒன்றை, ஆராய்ச்சிக் குழு தேர்வு செய்தது.

அந்த எலியின் வாலை மிதித்தபோது, அது வலியை உணரவில்லை. அமைதியாக நின்றது. ஆனால், வெப்பத்தை நன்கு உணர்ந்து கொண்டது. பின்னர், அந்த குடுப்பத்தினரின் ’ZFHX2' மரபணுவை எலிக்கு செலுத்தினர்.

அதன் பின்னர், அந்த எலி வலியுடன், வெப்பத்தையும் உணரவில்லை. இதன் மூலமாக, உடலின் வலியை மூளைக்கு கடத்தும் 16 வகை மரபணுக்களை, இந்த ‘ZFHX2' என்ற மரபணு கட்டுப்படுத்துகிறது என்ற உண்மை தெரிய வந்தது.

இதன் காரணமாகவே, அந்த குடும்பத்தினரால் வலியை உணர முடிவதில்லை. இந்நிலையில், இவர்களின் மரபணுவைக் கொண்டு, தீராத வலிக்கு மருந்துகள் கண்டறியும் முயற்சியில் ஜேம்ஸ் காக்ஸ் ஆராய்ச்சிக் குழு இறங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்