கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் காற்று மாசு: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவுள்ள காற்று மாசும் கருவிலிருக்கும் குழந்தையின் மூளையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

நகர சாலைகளின் போக்குவரத்து நெரிசலிலிருந்து வெளியாகும் வாகனப்புகை பள்ளிப்பருவ குழந்தைகளின் மூளையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

கருவிலிருக்கும்போது காற்று மாசுக்குட்படுத்தப்பட்ட (அந்த குழந்தையின் தாய் சுவாசித்த காற்றின் வழியே அவளது வயிற்றிலிருந்த கருவைச் சென்றடைந்த வாகனப் புகையிலுள்ள நச்சுப்பொருள்) குழந்தைகள், வளர்ந்து ஆறிலிருந்து பத்து வயதாகும்போது கவனம் செலுத்தவும், கவனச்சிதறலை தவிர்க்கவும் போராடுகின்றன என்று மேலும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இத்தகைய குழந்தைகளின் மூளையை MRI scan செய்து பார்க்கும்போது, சுய கட்டுப்பாட்டுடன் தொடர்புடையதான மூளையின் வெளிப்புற அடுக்கு அவர்களுக்கு மெல்லியதாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால், இந்தக் குழந்தைகளின் பெற்றோர், ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்துள்ள தர அளவீடுகளின்படி பாதுகாப்பானது என்று கருதப்படும் அளவுடைய மாசுவைக் கொண்ட காற்றைத்தான் சுவாசித்துள்ளனர்.

Barcelona Institute for Global Healthஇல் முக்கியப் பணியாற்றும் ஒருவரான Dr Monica Guxens கூறும்போது, இந்த புதிய கண்டுபிடிப்பு, பாதுகாப்பான அளவு என கருதப்படும் காற்று மாசு, குழந்தைகளின் ஞாபக சக்தியையும் கரு வளர்ச்சியையும் பாதிக்கலாம் என்னும் பழைய கண்டுபிடிப்புகளுடன் இப்போது இன்னொரு பாதிப்பையும் சேர்த்துள்ளது என்று கூறியுள்ளார்.

எனவே நமது நகரங்களில் தற்போது காணப்படும் காற்று மாசு பாதுகாப்பான அளவிலானது என்று நம்மால் உறுதியளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Dr John Krystal கூறும்போது, இதுவரை காற்று மாசு நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளுக்குதான் தீங்கு விளைவிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அது வளரும் குழந்தையின் மூளையின்மீது இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் எண்ணிப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

Netherlandஇல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் காற்று மாசுவுக்குட்பட்ட 783 குழந்தைகளின் ஸ்கேன்களை ஆய்வு செய்ததில் பல குழந்தைகளின் மூளையின் மேலடுக்கு மெல்லியதாக மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மாற்றம் அந்தக் குழந்தைகள் வளர்ந்து வரும்போது அவர்களது சுய கட்டுப்பாடு (ஆசையைக் கட்டுப்படுத்துதல்) மற்றும் யோசித்து முடிவெடுத்தல் போன்ற விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய யூனியன் நிர்ணயித்துள்ள தர அளவீடுகளின்படி பாதுகாப்பானது என்று கருதப்படும் அளவுடைய மாசுவைக் கொண்ட காற்றைத்தான் சுவாசித்துள்ளனர்.

வெறும் 0.5 சதவிகிதத்தினர் மட்டுமே பாதுகாப்பற்ற அளவு மாசு கொண்ட காற்றை சுவாசித்தவர்கள் ஆவார்கள்.

முடிவுரையாக பாதுகாப்பானது என்று கருதப்படும் அளவுடைய மாசுவைக் கொண்ட காற்றும்கூட கருவிலிருக்கும் குழந்தைக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், ஏனென்றால் அந்தக் குழந்தையின் மூளை நச்சுக்களை அகற்றும் அளவுக்கு இன்னும் முதிர்ச்சியடையாததே இதற்குக் காரணம் ஆகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்