இந்தோனேசியாவை புரட்டிப் போட்ட சுனாமி! 1200-க்கும் மேற்பட்டோர் பலி: உணவுக்காக ஓடும் மக்களின் பரிதாப நிலை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் நிலநடுக்கம் காரணமாக வீதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் அங்கிருக்கும் கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை சூறையாடி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவுப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவிற்கு பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலே சுலவேசி தீவின் வடமேற்கு கடற்கரைப் பகுதியை சுனாமி தாக்கியது.

சுமார் 20 அடி உயரத்து எழும்பிய அலைகள், கடற்கரையில் நின்று கொண்டிருந்த ஏராளமான மக்களின் உயிரை வாங்கியது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பலியானோரின் எண்ணிக்கை தற்போது 1200-யும் தாண்டியுள்ளது.

இதனால் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். குறிப்பாக பலு நகரம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள் தங்குவதை தவிர்த்து வருகின்றனர்.

மின்சாரமின்றி நகரமே இருளாகக் காட்சியளிக்கிறது. நிவாரணப் பொருள்கள் சரியான நேரத்தில் கிடைக்காததால் வீதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் அங்கிருக்கும் கடைகளையும், பெட்ரோல் நிலையங்களையும் சூறையாடுகின்றனர்.

கிடைக்கும் பொருள்களை அள்ளிச்செல்கின்றனர். பாட்டில்களில் பெட்ரோல்களை நிரப்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மோசமான சூழ்நிலை எங்களை இவ்வாறு செய்யத்தூண்டுகிறது. உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

சமையல் செய்ய முடியாது. இதன் காரணமாக கிடைப்பதை எல்லாம் எடுத்துச்செல்கிறோம். நியாயமான விலைக்கு விற்றால் ஏற்றுக்கொள்கிறோம் இதுதான் சமயம் என விலைகளைக் கண்மூடித்தனமாக உயர்த்துகிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொட்டலங்கள், கம்பளிகள் ஆகியவை ஹெலிக்காப்டர்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இவை அனைத்தும் உரிய நேரத்தில் வந்து சேர்வதில்லை தாமதமாகிறது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்