நாளுக்கு 10 பேர் கொல்லப்படுவார்கள்: 700 அகதிகளை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் உள்ளிட்ட 700 பேர் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாகவும், நாளுக்கு 10 பேர் வீதம் அவர்கள் கொல்லப்பட இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

சிரியாவில் உள்ள யூப்ரடீஸ் நதிக்கரையில் குறித்த கைதிகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ளதாகவும் புடின் வெளிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி பகுதியில் நடைபெற்ற தலைவர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடின்,

சிரியாவில் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் கைப்பற்றியிருந்த பகுதிகளை தற்போது மீண்டும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.எஸ் பயங்கரவாதிகள் இறுதி எச்சரிக்கைகளை அளித்துள்ளதாகவும், சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர் எனவும், ஒவ்வொரு நாளும் பத்து பேரை சுட்டுக்கொல்வதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பயங்கரமானது, இது ஒரு பேரழிவு என குறிப்பிட்டுள்ள புடின், ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டவர்களில் சில ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களும் உள்ளனர் என்றார்.

இருப்பினும், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பில் புடின் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

ரஷ்யாவின் முக்கிய செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அக்டோபர் 13 ஆம் திகதி சிரியாவின் Deir al-Zor மாகாணத்தில் உள்ள அகதிகள் முகாமை தாக்கிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுமார் 700 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகள் அகதிகள் முகாமை தாக்கியதும் கைது செய்ததும் உண்மை தான் என்றாலும், 700 பேர் என்ற எண்ணிக்கையில் தமக்கு சந்தேகம் இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஷ்ய ஊடகமானது சுமார் 130 குடும்பங்களை பயங்கரவாதிகள் கடத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

கடத்தப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் உள்ளதாக சிரியாவில் செயல்பட்டுவரும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு உறுதி செய்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்