நாட்டிற்குள் புகுந்த துருவக்கரடிகள்! ரஷ்யாவில் அவசர நிலை பிரகடனம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் துருவக்கரடிகள் புகுந்ததையடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் Novaya Zemlya தீவுப்பகுதியில் துருவக்கரடிகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.

உலக வெப்பமயமாதல் குறித்து தொடர்ந்து அறிவியலாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதன் காரணமாக துருவப்பகுதிகளில் இயற்கைக்கு மாறான காலகட்டங்களில், இயற்கைக்கு மாறான முறையில், பனி உருகுவது அதிகரித்துள்ளது.

இதனால் பனிக்காலத் தூக்கத்துக்கு போக வேண்டிய பனிக்கரடிகள் முதலான விலங்குகளின் தூக்கம் தொந்தரவு செய்யப்பட்டு, அவை மக்களை தாக்குவதும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடந்து வருவது வழக்கமாகி விட்டது.

இந்நிலையில், தற்போது ரஷ்யாவின் Novaya Zemlya தீவுப்பகுதியில் துருவக்கரடிகள் நுழைந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவர்களது அன்றாட வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் துவங்கி இதுவரை 52 கரடிகள் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்துள்ளன.

சில சந்தர்ப்பங்களில் கரடிகள் வீடுகளுக்குள்ளும் அலுவலகங்களுக்குள்ளும் புகுந்து மக்களை தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளதால், மக்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப யோசிக்கின்றனர்.

தற்போது ஆறு முதல் பத்து கரடிகள் குடியிருப்புப்பகுதிக்குள் நடமாடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கரடிகளை சுடுவதற்கு அனுமதி கோரிய மக்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

காரணம் துருவக்கரடிகள் அழிந்து வரும் இனம் என்பதால் அவற்றை சுட அனுமதியில்லை என்று அரசு கூறிவிட்டது.

இதனால் மக்கள் துருவக்கரடிகளை சுடவும் முடியாமல், வீட்டை விட்டு வெளியேறவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers