ஒருவரை பழிவாங்க மாணவி செய்த காரியம்: அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 25 பேர்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

துருக்கியில் சக மாணவர்களின் தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் திரவ பசையை கலந்ததால், உடல்நிலை சரியில்லாமல் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

துருக்கியில் புர்சா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் படித்து வரும் 9 வயது மாணவி, தன்னுடைய சக நண்பன் ஒருவரை பழிவாங்க நினைத்துள்ளார்.

அதன்படி, பள்ளியில் அனைத்து மாணவர்களும் உடற்கல்வி பாடத்திற்கு சென்ற சமயம் பார்த்து, அவர்களுடைய குடிதண்ணீர் பாட்டில்களை திறந்து திரவ பசையை கலந்துள்ளார்.

இதுபற்றி அறிந்திராத மாணவர்கள் வகுப்பிற்கு திரும்பியதும் பாட்டில்களை எடுத்து தண்ணீர் குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களிலே அனைவரும் உடல்நிலை சரியில்லாமல் சரிய ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த பெற்றோர்கள் அனைவரும் வேகமாக பள்ளி வளாகத்தின் முன்பு திரள ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் மாணவர்களின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட 25 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் ஒரு மாணவனை தவிர மற்ற அனைவரும் வீடு திரும்பிவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது மாணவர்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேசமயம் துருக்கியில் 14 வயதிற்குட்பட்டோர் மீது குற்றவியல் வழக்கு பாயாது என்பதால் பொலிஸார் விவகாரத்தில் தலையிடவில்லை.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்