கட்டுக்கடங்காமல் தொடர்ந்த வன்முறை.. ஆட்சி கலைப்பு! ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சூடான் நாட்டில் வன்முறை தொடர்ந்ததால், அந்நாட்டு ஜனாதிபதி ஒமர் அல்-பஷிர் மத்திய மற்றும் மாநில அரசுகளை கலைக்க உத்தரவிட்டு, ஓராண்டுக்கு அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

சூடானில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், அந்நாட்டில் ரொட்டி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, ரொட்டி விலையுயர்வைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் ஆகியோருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்துடன் அங்குள்ள கடைகளை சூறையாடிய போராட்டக்காரர்கள், அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்தும் சென்றனர்.

இச்சம்பவங்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை ஒடுக்க, கலவர தடுப்பு பிரிவு பொலிசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையிலான மோதல்களில் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன.

AFP

கடந்த ஆண்டு டிசம்பரில் 19 பேர் போராட்டங்களில் பலியான நிலையில், இதுவரை வன்முறை காரணமாக 50 பேர் வரை பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சூடானில் நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றதால், அந்நாட்டு ஜனாதிபதி ஒமர் அல்-பஷிர் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த கவர்னர்கள் மற்றும் ஆளும்கட்சி தலைவர்கள் ஆகியோரை ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்தார்.

அந்தக் கூட்டத்தில் எந்தவித சுமூகமான முடிவும் எடுக்கப்படாததால், நாட்டில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, அந்நாட்டின் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து உத்தரவிட்டார்.

மேலும், இதுதொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஓராண்டு காலத்துக்கு அவசரநிலை சட்டம் பிரகடனப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்