5 நாட்களில் 80 பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம்... தலைவிரித்தாடும் பஞ்சம்: பதற வைக்கும் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வெனிசுலா நாட்டில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், 80 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் பட்டினியால் வாடும் குடிமக்கள் கடைகளில் புகுந்து சூறையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

கராகஸ் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் புகுந்து சூறையாடிய 40 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 80 பச்சிளம் குழந்தைகள் உரிய சிகிச்சை இன்றி மரணமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலாவில் எதிர்க்கட்சி தலைவரான ஜுயான் கொய்டோ இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இருப்பினும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெனிசுலாவில் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவுகிறது.

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மின்சார உற்பத்தியிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி கிடக்கின்றன.

மேற்கு மாகாணங்களான பரினாஸ், தசீரா, ஷூலியா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லை. கராகஸ், மிராண்டா, வர்காஸ் ஆகிய மாகாணங்களில் மின்சாரம் விட்டுவிட்டு வருகிறது.

இங்குள்ள சர்வதேச விமான நிலையங்கள், உள்ளூர் மெயின் விமான நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மின் தட்டுப்பாடு காரணமாக சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க முடியவில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் 15 சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers