இந்தோனேஷியாவில் பெய்த கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 68ஆக உயர்வு! மீட்புப்பணி தீவிரம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு 68 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பபுவா மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால், பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

நேற்றைய தினம் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 42 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 55 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஜெயபூரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால், அங்குள்ள வீடுகள் நீரில் மூழ்கின.

AP
Netty Dharma Somba/AFP

அத்துடன் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

AP

கடந்த ஜனவரி மாதம் சுலாவேசி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்