அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருங்கள்! ராணுவத்தினருக்கு வெனிசுலா ஜனாதிபதியின் உத்தரவால் பரபரப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நம் நாட்டின் மீது படையெடுக்க துடிக்கும் அமெரிக்காவின் மூர்க்கத்தனத்துக்கு பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என ராணுவத்துக்கு வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மடுரோ உத்தரவிட்டுள்ளார்.

வெனிசுலா நாட்டில் ஜனாதிபதியாக இருந்த நிகோலஸ் மடுரோ, கடந்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சியினர் இந்த தேர்தல் முடிவை ஏற்கவில்லை. அத்துடன் எதிர்க்கட்சி தலைவரான ஜூவான் குவைடோ தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டு, மடுரோவை வெளியேற்ற முயற்சித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதியில் இருந்து வெனிசுலாவில் தொடர்ந்து போராட்டங்கள், வன்முறை என பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நிகோலஸ் மடுரோவின் அரசை ரஷியா, சீனா, பொலிவியா, துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் ஆதரித்து வருகின்றன. அமெரிக்கா உட்பட 54 நாடுகள் ஜூவான் குவைடோவை ஆதரிக்கின்றன.

இந்நிலையில், குவைடோ முதல் முறையாக ராணுவ வீரர்களுடன் தோன்றி, அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்றும், தனது கோரிக்கையை ஏற்று மடுரோவை வெளியேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதன் பின்னர், குவைடோவின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கராகஸ் ராணுவ தளத்தில் திரண்டபோது, பொலிசாரும், ராணுவ வீரர்களும் அவர்களை கலைக்க முற்பட்டபோது கலவரம் வெடித்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, குவைடோவின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, கலவர தடுப்பு பிரிவு பொலிசார் அவர்களை விரட்டியடித்தனர்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துவிட்டதாக ஜனாதிபதி மடுரோ தெரிவித்தார். அத்துடன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உரையாற்றிய அவர், ராணுவத்தில் ஒரு சிறு குழுவினர் அரசைக் கவிழ்க்கும் முயற்சியாக வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Reuters

வெனிசுலாவில் அதிகரித்து வரும் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு முடிவுகட்டும் வகையில், அங்கு சுமூகமான ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.

அதன் பின்னர் நேற்றைய தினம், ‘உங்கள் உரிமையை நீங்கள் நிலைநாட்டும் வகையில் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுங்கள்’ என மைக் பாம்பியோ தெரிவித்தார். இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ கூறுகையில், ‘நம் நாட்டின் மீது படையெடுக்க துடிக்கும் அமெரிக்காவின் மூர்க்கத்தனத்துக்கு பதிலடி கொடுக்க தயாராக இருங்கள்.

அமெரிக்கா என்றாவது ஒருநாள், இந்த புனிதமான நமது தாய்மண்ணை தொடுவதற்கு துணிந்தால் நமது தாய்நாட்டை காப்பாற்றும் வகையில் கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்’ என தமது நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்