பனியுகத்தில் வாழ்ந்த ஓநாயின் தலை மீட்பு: எத்தனை ஆண்டுகள் பழைமையானது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் சைபீரிய உறைபனி பகுதியில் இருந்து 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓநாயின் தலை மட்டும் தனியாகக் கிடைக்கப்பெற்றுள்ளது ஆராய்ச்சியாளர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பனியில் புதைப்பட்டிருந்ததால் தோல், சதை என எதுவுமே அழுகாமல் அப்படியே இருந்துள்ளது.

மாமூத் தந்தங்கள் தொடர்பில் தேடுதலில் இறங்கிய அந்தப் பகுதி மக்கள் குறித்தத் தலையை அங்கிருக்கும் Tirekhtyakh நதிக்கரையில் கண்டெடுத்துள்ளனர்.

வியப்பில் ஆழ்ந்த அந்த மக்கள் உடனடியாக அங்கிருக்கும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாமூத் ஆராய்ச்சி பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உறைபனி சூழ்ந்த பகுதி என்பதால் 40,000 ஆண்டுகள் கடந்தும் திசுக்கள் பாதுகாக்கப்பட்டு அப்படியே இருக்கும் எனவும்,

இதைப்போன்ற பாகம் ஒன்று கிடைப்பது இதுவே முதல்முறை எனவும் அந்தப் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ப்ரோடோபோபோவ் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த ஓநாயின் மூளை, மண்டைஓடு அமைப்பு உள்ளிட்டவைகளை டிஜிட்டல் மாடல் தயார் செய்வதில் தீவிரமாக களமிறங்கியுள்ளது இந்தக் குழு.

மேலும், இதன் தலை எப்படி துண்டிக்கப்பட்டிருக்கும் என்ற கேள்விக்கும் விடை தேடப்பட்டுவருகிறது.

இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சிங்க இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குட்டியின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

42,000 ஆண்டுகள் பழைமையான மான் உடலும் திரவ ரத்தத்துடன் கிடைத்திருக்கிறது. இதை குளோன் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

புவி வெப்பமடைவது இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்பதால் காலப்போக்கில் இன்னும் பல விலங்குகளின் மிச்சம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சிகளின் மூலம் அந்தக் காலம் எப்படி இருந்தது, விலங்குகள் எப்படி வாழ்ந்தன எனப் பல விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்