எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் திடீரென மயங்கிவிழுந்து மரணம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

எகிப்திய நாட்டின் முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி, திடீரென நீதிமன்றத்தில் மயக்கமடைந்து இறந்துவிட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்ற முகம்மது மோர்சி, ஹோஸ்னியின் 30 ஆண்டு ஆட்சிக்கு முடிவு கட்டினார்.

அந்த சமயத்தில் நாட்டை சீர்படுத்துவதற்கு மோர்சி எடுத்த சில நடவடிக்கைகள் மக்களுக்கு பிடிக்காத காரணத்தால் புரட்சி ஏற்பட்டது.

இதனை ஒடுக்கும் விதத்தில் மோர்சியின் ஆதரவாளர்கள் செயல்பட்டபோது நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையினை 48 மணி நேரத்திற்குள் சரி செய்யவேண்டும் என இராணுவம் உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் விடுத்த கெடு முடிந்ததை அடுத்து, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட இராணுவம், ஆட்சியை கலைத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அதிபராக அறிவித்தது.

இந்த சமயத்தில் கத்தாருக்காக உளவு பார்த்ததாக மோர்சி மீது குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 2012 டிசம்பரில் போராட்டக்காரர்களைக் கொன்றது தொடர்பாக அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.

2012ம் ஆண்டு தேர்தல் ஆவணங்களில் முறைகேடு செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மோர்சி, இன்று நீதிமன்றத்தில் 20 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென மயக்கமடைந்து தரையில் விழுந்த அவரை, உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்