கடலில் உணவு, தண்ணீரின்றி நான்கு நாட்கள்.. போராடி மீண்ட வீரரின் அசாத்திய கதை!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

கடலோடு 4 நாட்கள் போராடி உயிர் பிழைத்து, கடலில் குதிக்கும் வீரர்களுக்கு ஆலோசகராக பணியாற்றி வரும் சாகச வீரர் குறித்து இங்கு காண்போம்.

நியூசிலாந்து கடற்படையைச் சேர்ந்தவர் ராப் ஹெவிட்(38). இவர் நியூசிலாந்து கடற்படையில் 20 ஆண்டுகளாகப் பணிபுரிகிறார். திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், வாழ்க்கையில் புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தார் ராப்.

அதன்படி தனது வேலையில் இருந்து ஒன்பது வாரங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள நினைத்தார். ஆழ்கடலுக்குப் பயணம் செய்வது என முடிவு செய்த ராப், அருகில் இருந்த Underwater dive station செல்கிறார். தனக்கு ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால், ஆழ்கடலுக்குள் குதிக்கிற குழுவோடு இணைந்து பயணம் செய்வதென முடிவெடுக்கிறார்.

ஆனால், தனது முடிவுக்கு மனைவி சம்மதிக்காத நிலையில், அவரை சமாதானப்படுத்தி 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் திகதி மொத்தக் குழுவுடன் கடலுக்குள் செல்கிறார் ராப். நியூசிலாந்தின் மனா தீவில் சற்று தொலைவில் கடலில் படகு நிறுத்தப்பட்டது. அவர்களது குறிக்கோள் ஆழ்கடலில் இருக்கிற CRAYFISH என்கிற கடல் நண்டுகளைப் பிடித்துக்கொண்டு மீண்டும் படகுக்குத் திரும்புவதுதான்.

KEVIN STENT/FAIRFAX NZ

ஒவ்வொருவரும் ஆழ்கடலில் எவ்வளவு நேரம் இருக்கிறோம், எவ்வளவு கடல் நண்டுகளைப் பிடிக்கிறோம் என்பது தான் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. அதன்படி பாதுகாப்பு உபகரணங்களுடன், முதலில் ஆக்சிஜன் சிலிண்டரைக் கட்டிக்கொண்டு படகில் இருந்து எல்லோரும் கடலுக்குள் குதிக்கிறார்கள்.

கடலில் குதித்தவர்கள் அரிய வகையான கடல் நண்டுகளைத் தேடி பயணிக்கின்றனர். பின்னர் படகுக்கு திரும்பிய வீரர்கள் நண்டுகளை தங்கள் கையில் காண்பிக்கின்றனர். ஆனால், ராப் நண்டு இல்லாமலேயே திரும்புகிறார். இதனால் வருத்தமடைந்த ராப், தான் அவமானப்பட்டதாக நினைத்து அன்றைய தினமே 4 மணிக்கு ஆழ்கடலுக்கு செல்வது என மீண்டும் முடிவெடுக்கிறார்.

அவருக்கு துணையாக வந்த சக வீரரும் கடலுக்குள் குதிக்கிறார். ஆனால், பாதுகாப்பு உபகரணங்களில் கோளாறு ஏற்படவே அவரால் தொடர்ந்து நீந்த முடியாமல் போகிறது. உடனே அவர் படகுக்கு திரும்புகிறார். எனினும், ராப் தனியாக ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அதன்படி கடலின் தரைதளத்துக்கு வரும் ராப், கடல் பாசிகள் மற்றும் கடல்தாவரங்களைப் பார்க்கிறார்.

அங்கே சில தாவரங்களையும், சில பாசிகளையும் எடுத்து தன்னுடைய பையில் போட்டுக் கொள்கிறார். எனினும் நண்டுகளை தேடி ஆழ்கடலின் பாறைகளுக்குள் செல்கிறார். CRAYFISH நண்டை பின் தொடர்ந்து பயணிக்கிறார் ராப். ஒரு சில நிமிடங்களிலேயே கடல் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. ஆனால், அவர் நண்டு பிடிப்பதிலேயே குறியாக இருந்தார்.

ஒரு நண்டைப் பிடித்து பைக்குள் போட்டு விடுகிறார். ஆழ்கடலில் சுமார் 20 நிமிடங்கள் தாக்குப்பிடித்தார் ராப். இந்நிலையில் தான் ஒரு சுழலில் சிக்கிக்கொள்கிறார். கடல் அவரை புரட்டிப் போட்டுவிடுகிறது. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரின் வேகத்தால் வேறு ஒரு பக்கமாகத் தூக்கி வீசப்படுகிறார்.

அதன் பின்னர் 40 நிமிடங்கள் கழித்து மீண்டும் கடல் மட்டத்திற்கு வருகிறார் ராப். ஆனால் அங்கு படகு இல்லை. படகு சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதைப் பார்த்து கை அசைக்கிறார். ஆனால், எதிர்திசையில் படகு பயணிக்கிறது. அவரோடு பயணித்தவர்கள் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் 20 வருடக் கடற்படை அனுபவம் ராப்பிற்கு கைகொடுக்கிறது. கடல் கொந்தளிப்பு காரணமாக அவரால் நீந்த முடியாமல் போகிறது. கடற்படையால் இவரை கண்டறிய முடியவில்லை. ராப் காணாமல்போன 5 மணி நேரங்கள் கழித்து, கடற்படைப் படகுகள் மீட்புப் பணியைக் கைவிட்டு மீண்டும் கரைக்கு திரும்புகின்றன.

அவருக்கு உண்பதற்கு தண்ணீரும், உணவும் இல்லை. ஒரு இரவு தாக்குப்பிடித்தால் பிழைத்துவிடலாம் என கடைசியாக நினைக்கிறார். அவர் அணிந்திருந்த பாதுகாப்பு உபகரணங்கள் அவர் கடலில் மிதப்பதற்கு உதவியாக இருந்தன. அவரது உடல் வெப்பத்தை இழந்தது. சுறா மீன்களிடம் எப்படியோ தப்பித்து அன்று இரவை கழித்தார்.

இந்நிலையில் முதல் நாள் குதித்த இடத்திலிருந்து 16 மைல்களுக்கு அப்பால் அலையின் வேகத்தால் வீசப்படுகிறார். தனிமை அவரை கொல்கிறது. அவரது பையில் இருந்த பாசிகள் கடல் தாவரங்களை உண்கிறார். உப்பு நீர் அவரது உடலை சிதைக்க ஆரம்பிக்கிறது. இரண்டாவது நாளும் ஒருவழியாக கடந்துவிடுகிறது. 3வது நாள் காலை அவரது உடல் அசையவே மறுக்கிறது.

பசியும், தாகமும் வாட்டுகிறது. சூரிய ஒளி பட்டு உடலில் கொப்புளங்கள் தோன்றுகின்றன. இந்நிலையில் வேறுவழியின்றி தன்னிடம் இருந்த நண்டையும் சாப்பிடுகிறார். பின்னர் தன்னிடம் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றையும் கடலில் வீசுகிறார். உடல் சிறிது இலகுவாகிறது. அப்படியே கடலில் மிதந்துகொண்டே இருக்கிறார். அவர் உதவி கேட்கும் நிலையில் இல்லை.

தற்கொலைக்கு முயன்றும் உயிர் பிழைக்கிறார். இனி போராடி ஏதும் ஆகப்போவதில்லை என்ற நிலையில், உடல் பாக்டீரியாக்களால் சூழப்பட்டுவிட்டது. ஹைபோதெர்மியா நோயாலும் அவரது உடல் பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 75 மணி நேரங்களைக் கடந்து, பிப்ரவரி 8ஆம் திகதி கடற்படை வீரர்கள், ராப்பை மனா தீவிலிருந்து 500 மீற்றர்கள் தொலைவில் கண்டறிகிறார்கள்.

Nzpa/Reuters

உடனடியாக அவரை மீட்டு படகில் வைத்து முதலுதவி செலுத்துகிறார்கள். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் ராப். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் 4 நாட்களில் 10 கிலோவை இழந்திருந்தார். உடல் சிதைந்து போயிருந்தது. எனினும், 14 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறார்.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் ராப், வாழ்வில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். தனது நான்கு நாட்கள் போராட்டத்தை புத்தகமாக எழுதினார். Treading Water: Rob Hewitt's Survival Story என்கிற அந்தப் புத்தகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் கடலில் குதிக்கும் வீரர்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார் ராப்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்