20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி? ஐநாவின் விசாரணையில் சிக்கும் பிலிப்பைன்ஸ்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐ.நா சபை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ரோட்ரிகோ டியுடெர்ட் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். அவர் போதைப் பொருளுக்கு எதிராக நடத்தும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளின் மூலம், இதுவரை 5,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஊடகங்களில் 20,000க்கும் மேற்பட்டோரை பிலிப்பைன்ஸ் ராணுவம் கொன்று குவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டியுடெர்டின் இந்த செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாடுகள் ஐ.நா சபைக்கு கோரிக்கை வைத்துள்ளன.

குறிப்பாக, இதுதொடர்பாக ஐஸ்லாந்து சமர்பித்துள்ள அறிக்கைக்கு ஐரோப்பிய நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் மீது ஐக்கிய நாடுகள் சபை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, கடந்த வாரம் போதைப் பொருள் கும்பலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று வயது சிறுமி தவறுதலாக கொல்லப்பட்டது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்