ஒரே வாரத்தில் 3வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தி வடகொரியா உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
அமெரிக்கா-வடகொரியா இடையிலான இரண்டாவது முறை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹூடோ தீபகற்பத்தில் இருந்து 2 குறுகிய தூர ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா சோதனை செய்தது. இதனை அண்டை நாடான தென் கொரியா உறுதிப்படுத்தியது. ஆனால், இதுகுறித்து வடகொரியா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்று காலை, வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஓர் இடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அதிகாலை 2.59 மற்றும் 3.23 மணிக்கு, குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை வடகொரியா இருமுறை பரிசோதித்துள்ளதாகவும், கடந்த ஒரு வார காலத்தில் 3வது முறையாக இதுபோன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தென் கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது என்ற விவரம் வெளியாகவில்லை. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவத்தினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.