வெளிநாட்டில் தங்கப்பதக்கங்களை குவித்த தமிழ்ப்பெண்..! திருமணமாகியும் சாதித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சீனாவில் நடைபெற்று வரும் உலகக் காவல்துறையினர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டுள்ள பெண் காவலர் கிருஷ்ணரேகா, இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணரேகா(34) கலந்துகொண்டார். சேரமங்கலத்தைச் சேர்ந்த இவர், மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

முதற்கட்டமாக உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற அவர், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல், ஷாட் புட், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற ஏழு விளையாட்டுகளின் கலவையான Heptathlon போட்டிகளில் கலந்துகொண்டு, அதிலும் வெற்றி பெற்று இரண்டாவது தங்கத்தை வென்று அசத்தினார்.

இந்நிலையில், நேற்றைய தினம் நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின விழாவில் கிருஷ்ணரேகாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மரவேலை செய்து வரும் செந்தில் என்பவரை, கடந்த 2010ஆம் ஆண்டு கிருஷ்ண ரேகா திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு கவின்(8), கஜின்(7) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்ட கிருஷ்ணரேகா, உயரம் தாண்டுதல் போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான நிலையிலும் சாதித்துக் காட்டிய கிருஷ்ணரேகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்