தீ பிடித்த விமானம்: 226 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு குவியும் பாராட்டுக்கள்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பறவை மோதியதால் தீ பிடித்து எறிந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 226 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மாஸ்கோவில் உள்ள ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் புறப்பட்ட விமானத்தில் சிறிது நேரத்திலேயே பறவை ஒன்று மோதியதால் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னதாகவே துணிந்து செயல்பட்ட விமானி, ஓடுபாதைக்கு அருகே உள்ள கிராமப்புற சோளக் காட்டில் விமானத்தை தரையிறக்கினார்.

இதில் 23 பயணிகளுக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மற்றபடி எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 226 பேரின் உயிரையும் காப்பாற்றிய 41 வயது விமானி தமீர் யூசுபோவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமானி, விமானம் புறப்பட்டதும் பறவை மோதியதில் தீ பிடித்து இயந்திரத்தில் ஒரு பகுதி சேதமடைந்துவிட்டது. உடனே நான் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விமானத்தை திருப்ப முயன்றேன்.

ஆனால் அதற்குள்ளாக மற்றொரு இயந்திரமும் சேதமடைந்துவிட்டது. நிச்சயம் விமான ஓடுதளத்தை அடையமுடியாது என்கிற காரணத்தினாலே சோளக் காட்டில் விமானத்தை தரையிறக்கினேன். அந்த சமயத்தில் பயணிகள் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். விமானத்தை தரையிறக்கியதும் என்னுடைய மனைவிக்கு தான் முதலில் போன் செய்து நடந்தவற்றை கூறினேன்.

இந்த சம்பவத்தால் என்னை பலரும் 'ஹீரோ' என கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய மனைவி ரோசியா கூறுகையில், "அவர் என்னை அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது, எல்லோரும் உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறினார். அது என்ன என்று நான் கேட்டேன். பறவைகள் இயந்திரத்தைத் தாக்கியது, அடுத்த நொடியே நாங்கள் ஒரு வயலில் இறங்கினோம் என்று அவர் கூறினார். நான் திகிலடைந்தேன், பீதியடைந்தேன், கண்ணீர் விட்டேன். இவை எல்லாமே அடுத்தடுத்து சில வினாடிகளில் நடந்திருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்