காட்டுக்குள் காணாமல்போன ஐந்து வயது சிறுமி: கரடிக்கு தப்பிய அதிசயம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

காட்டுக்குள் காணாமல்போன ஒரு ஐந்து வயது சிறுமி, அவரைப் பின் தொடர்ந்த கரடிக்குத் தப்பி நான்கு நாட்களுக்குப்பின் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்ட அதிசய சம்பவம் ஒன்று ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.

ஐந்து வயதாகும் ரஷ்ய சிறுமி Zarina Avgonina, காட்டுக்குள் காளான் பறிக்கச் சென்ற தனது பாட்டியைப் பின்தொடர்ந்து சென்றபோது, காட்டுக்குள் வழி தப்பிப்போயிருக்கிறாள்.

நான்கு நாட்களாக அவளைத் தேடும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்தார்கள்.

ஆழமான நீரூற்றுகளும், சீறிப்பாய்ந்தோடும் ஆறுகளும் உடைய Nizhny Novgorod காட்டுப்பகுதியில், அவள் ஒரு வேளை தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற அச்சமும் மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

தேடிச் சென்ற மோப்ப நாய்களாலும் Zarinaவைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆண்களைக் கண்டால் பயப்படும் Zarinaவைக் கண்டுபிடிப்பதற்காக, ஒவ்வொரு மீட்புக்குழுவிலும் பெண்களும் சேர்க்கப்பட்டார்கள்.

இதற்கிடையில் Zarinaவைத் தேடிச் செல்லும் மீட்புக்குழுவினருக்கு, அவர்கள் கண்ட ஒரு காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அது என்னவென்றால், Zarinaவின் காலடித்தடங்களைத் தொடர்ந்து ஒரு கரடியும் சென்றிருப்பது, அதன் காலடித்தடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

தேடுவோருக்கு, அந்த குழந்தை ஒரு வேளை கரடியால் பீறப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் மேலிடலாயிற்று.

ஆயுதம் தரித்த வேட்டைக்காரர்களையும் மீட்புக் குழுவினர் தங்களுடன் சேர்த்துக் கொண்டு தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.

திகிலுடனும், சந்தேகத்துடனும், அதே நேரத்தில் விடாமுயற்சியுடன் மீட்புக் குழுவினர் காலடித் தடங்களைத் தொடர, ஒரு புதருக்குள் இருந்து இரண்டு கண்கள் பளிச்சிடுவது தெரிந்திருக்கிறது.

விரைந்து சென்று, Zarinaவை அள்ளி அணைத்துக் கொண்ட மீட்புக்குழுவைச் சேர்ந்த ஒருவர் அவளிடம், பயமாக இருந்ததா? என்று கேட்க, அவள் சொன்ன பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மீட்புக் குழுவினர் கொடுத்த சிறிய அளவு உணவையும் தண்ணீரையும் ஆவலுடன் உண்ட Zarina, எனக்கு பயமாக இல்லை, ஆனால் தாகமாக இருந்தது, கேக் சாப்பிட வேண்டும், வீட்டுக்குப்போக வேண்டும் அவ்வளவுதான், என்றாளே பார்க்கவேண்டும்.

தான் வசிக்கும் Stepanovka என்னும் கிராமத்திலிருந்து ஒரு மைல் தொலைவில், Zarina கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள்.

பின்னர், காட்டிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள் Zarina.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்