அமேசான் காடுகளை காக்க களமிறங்கியுள்ள பழங்குடியினர்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மூன்று வாரங்களுக்கு மேலாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், தாங்கள் புனிதமானதாக கருதும் வனத்தைக் காக்க, இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம் என அமேசானின் முரா பழங்குடியினர் உறுதிபூண்டுள்ளனர்.

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், இது தங்களுக்கு எதிராக வெள்ளையின மக்கள் நடத்தும் அட்டூழியம் என்று குற்றம்சாட்டியுள்ளனர் முரா பழங்குடியினர்.

காடுகளை அழிப்பது வெள்ளையர்களின் இலக்கு என்றும், உடலில் கடைசி சொட்டு ரத்தம் மிச்சம் இருக்கும் வரை அமேசானைக் காப்பது தங்கள் நோக்கம் என்றும் முரா பழங்குடியினர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

காலனி ஆதிக்கம், காடு அழிப்பு, ஊடுருவல், நோய்த் தொற்று என பல பிரச்னைகளை எதிர்கொண்டு நீளும் தங்கள் தலைமுறைக்கும், எதிர்கால தலைமுறைக்கும், உலகுக்கும் வனம் என்பது தேவையான ஒன்று என முரா பழங்குடியினர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அமேசானில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, லண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன் பழங்குடியினர் போராட்டங்களை நடத்தினர்.

அமேசானில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, இயற்கை ஆர்வலர்களோடு பழங்குடியினர்களையும் போர்க்கொடி உயர்த்தச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலின் பாதுகாக்கப்பட்ட மழைக்காடுகளை உள்ளடக்கிய Amazonas மாகாணத்தில் 18,000க்கும் அதிகமான முரா பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்