உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி வரும் செய்தி... கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்த பிரபல நடிகர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரபல ஹாலிவுட் நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ அமேசானில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை தடுப்பதற்க்கும், அதன் மழைக்காடுகளைப் பாதுகாப்பதற்காகவும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியுள்ளார்.

உலகின் நுரையீரல் எனக் கருதப்படும் அமேசான் உலக மக்களுக்கான 20 சதவீத ஆக்ஸிஜனை வழங்கிவருகிறது. ஆனால் சமீபத்தில் அந்த மழைக்காடுகளில் காட்டுத் தீ பரவி வருவதால், அதனால் எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான ஏக்கர் மரங்கள் அழிந்து வருவதால், அதை தடுக்க பிரேசில் அதிபர் ராணுவத்தை அனுப்பியுள்ளார்.

இத்தீயைத் தடுக்க மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படுவதால் அமேசானை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அமேசானில் உருவாகியிருக்கும் காட்டுத் தீயினால், மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

அமேசானுக்குள் உள்ள முக்கிய வாழ்விடங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் சில உள்ளூர் அமைப்புகளும் அங்குள்ள பழங்குடிச் சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் ஹாலிவுட்டின் பிரபல நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ் மற்றும் பிரையன் ஷெத் ஆகியோரால் இணைந்து எர்த் அலையன்ஸ் என்ற சுற்றுச்சூழலுக்கான அமைப்பை தொடங்கியுள்ளனர்.

சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், பருவநிலைக்கான நீதியை உறுதிப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஆதரிக்கவும் மற்றும் உள்நாட்டு உரிமைகளைப் பாதுகாக்கவும் செயல்படும் இந்த அமைப்பு Amazan Forest Fund என்ற பெயரில் நிதி திரட்டி வருகிறது.

இதில் நன்கொடையாக வழங்கப்படும் நிதிகள் அமேசான் காடுகளைப் பாதுகாக்க தீவிரமாக இயங்கிவரும் 5 உள்ளூர் அமைப்புகளுக்கு போய்சேரும் என்று இந்த அமைப்பு தெரிவிக்கிறது.

இதன் முதல் கட்டமாக டைட்டானிக் பட ஹீரோ டிகாப்பிரியோ 5 மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளார்.

இதன்மூலம் அமேசானைக் காப்பதற்கான நிதி திரட்டும் பணியை அவர் தொடங்கிவைத்துள்ளார். இந்த நன்கொடை தொகை அவர் தொடங்கியுள்ள எர்த் அலையன்ஸ் என்ற அமைப்பின் மூலம் இந்த அமைப்புகளுக்கு சென்றடையும்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சர்வதேச பருவநிலை மாற்றங்களுக்கான தீர்வின் ஒரு முக்கியமான பகுதி அமேசான். உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளைக்கொண்ட அமேசான் இல்லாமல் நாம் புவி வெப்பமயமாதலை நாம் கட்டுப்படுத்த முடியாது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்