வெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளிடம் லட்சக்கணக்கான பொருட்கள் பறிமுதல்... சிக்கிய தமிழர்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டிற்கு சுற்றுலாப்பயணிகளாக சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரை விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது கோடிக்கணக்கான நகையை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்முனாக்(45), புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அஸ்கர் அலி(39). இவர்கள் இரண்டு பேரும் சுற்றுலா பயணி விசா மூலம் துபாய் சென்று விட்டு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயில் இருந்து சென்னை வந்த எம்ரேட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்துள்ளனர்.

அப்போது அதிகாரிகள் அவர்களை சோதனை செய்த போது ஒன்றுமில்லை. அதன் பின் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று உள் ஆடையை சோதனை செய்த போது, தங்ககட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் விமானம் சென்னை வந்தது அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த இப்ராஹீம் (32), சையத் (26) ஆகிய இரண்டுபேர் சுற்றுலா பயணிகளாக சார்ஜா சென்றுவிட்டு சென்னை வந்துள்ளனர்.

இவர்கள் இருவரின் பைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, உள்ளே உபயோகப்படுத்தப்பட்ட 26 லேப்டாப்கள், 8 பண்டல் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. அதன் பின் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது, அவர்களது உள் ஆடையில் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தை கண்டுபிடித்து அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதோடு மட்டுமின்றி காலை 6.15மணிக்கு துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் அலி (24) சிவகங்கையை சேர்ந்த ஷபீர்கான் (24) ஆகியோர் துபாய்க்கு சுற்றுலாப் பயணியாக சென்று விட்டு வந்தனர்.

அப்போது அவர்களது உள் ஆடைகளில் தங்க கட்டிகள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. சுங்க அதிகாரிகள் 6 பேரிடம் இருந்தும் 3.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் சர்வதேச மதிப்பு 1.38 கோடி ரூபாய் எனவும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப், சிகரெட்டுகள் மதிப்பு 2 லட்சம் என மொத்தம் 1.40 கோடி ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானநிலையத்தில் சிக்கிய 6 பேரையும் விமான நிலைய அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் அவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்