சவுதி கூட்டுப்படைகள் கொலைவெறி தாக்குதல்: கொத்தாக கொல்லப்பட்ட 100 பேர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா கூட்டுப்படைகள் முன்னெடுத்த வான்வழி தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் நாட்டின் தலைநகரான சனா நகரின் அருகாமையில் அமைந்துள்ள சில பகுதிகள் மற்றும் துறைமுக நகரமான ஏடனில் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ள ஹவுத்தி போராளிகள் மற்றும் பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்டைநாடான சவுதி அரேபியாவின் உதவியுடன் புரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 100-கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்நாட்டின் தலைநகர் சனாவில் இருந்து சுமார் 100 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள தாமர் என்ற பகுதியில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இவர்களுடன் போரிட்டு பிடிபடும் அரசுப்படையினரை கைது செய்து அடைத்து வைப்பதற்காக இங்குள்ள பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றை சிறைச்சாலையாக ஹவுத்திகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சிறைச்சாலையை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று வான்வழி தாக்குதல் முன்னெடுத்துள்ளனர்.

ஏமனில் இந்த ஆண்டு இதுவரை சவுதி கூட்டுப்படைகளால் முன்னெடுக்கப்படும் மிக மோசமான தாக்குதல் இது என சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் சுமார் 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஏமன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஓராண்டுக்கு முன்னர் பாடசாலை பேருந்து மீது சவுதி அரேபியா முன்னெடுத்த வான்வழி தாக்குதலில் 40 மாணாக்கர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...