தொடர் போராட்டங்களின் எதிரொலி.. மசோதாவை திரும்ப பெறும் ஹாங்காங்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
52Shares

கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதாவை தற்போது திரும்ப பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் பிடிபடுபவர்களை, சீனாவுக்கு நாடு கடத்தி அவர்கள் மீது விசாரணை நடத்த ஏதுவாக, கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால், இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று, ஹாங்காங்கில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

வார இறுதியில் மட்டுமே நடந்த இந்த போராட்டங்கள், வார நாட்களிலும் நடைபெற்றது. இதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் வலுத்து வந்தது.

குறிப்பாக, முப்படையைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் வீரர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து, இந்த போராட்டத்தின் எதிரொலியாக, கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதாவை ஹாங்காங் அரசு திரும்பப் பெறுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தொடர் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலை நாட்டவும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக, ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம், ஹாங்காங்கில் நடந்து வந்த மிகப்பெரிய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹாங்காங் மக்களை பொலிசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்