இதை செய்யாவிட்டால் அணுசக்தி ஒப்பந்தத்தை நாங்கள் மீறுவோம்! அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு தங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால், அணு சக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மீறுவோம் என்று அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி மையங்களில் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவிதத்திற்குள் மட்டுமே செறிவூட்ட ஈரான் சம்மதித்தது.

அதற்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டினால், அதனை அணு ஆயுதங்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு மே மாதம், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும், ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்தம் வரையறுத்துள்ள அளவை விட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிக அளவில் கையிருப்பு வைப்பதாகவும், 3.67 சதவிதத்திற்கும் மேல் அதனை செறிவூட்டப்போவதாகவும் அறிவித்து ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்காவிட்டால், 3வது கட்டமாக மேலும் ஓர் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனையை மீறுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் Abbas Araghchi கூறுகையில், ‘கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகளின் அமலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.

அந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீண்டும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

நான்கு மாத காலத்தில் 1,500 கோடி டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் விற்பனை செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை 3வது கட்டமாக நாங்கள் மீறுவோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்