ஆண் வேடமிட்டு ஆசையை நிறைவேற்றிய இளம்பெண்: துயரத்தில் முடிந்த உலகை உலுக்கிய சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானில் கால்பந்து விளையாட்டை ரசிக்க ஆண் வேடமிட்டு அரங்கம் சென்ற இளம் பெண், தீக்குளித்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்த தகவல் உலகை உலுக்கியுள்ளது.

தலைநகர் தெஹ்ரானில் குடியிருக்கும் இளம் பெண் Sahar Khodayari இவருக்கு கால்பந்து விளையாட்டு என்றால் உயிர்.

ஆனால் இதுவரை எந்தப் போட்டிகளையும் அவர் நேரில் சென்று பார்த்தது இல்லை. இந்த நிலையில் தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு கால்பந்து விளையாட்டை நேரில் காண அவர் முடிவு செய்துள்ளார்.

ஈரானை பொறுத்தமட்டில் ஆண்கள் பங்குபெறும் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸஹர், கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்துக்கு நுழைய முயன்றபோது கைதுசெய்யப்பட்டு மூன்று நாள்கள் சிறையில் கழித்திருக்கிறார்.

பின்னர், பிணையில் வெளிவந்த அவர் வழக்கு விசாரணைக்காக 6 மாதங்கள் காத்திருந்தார்.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் நீதிபதி வராத காரணத்தினால் வழக்கு நடைபெறவில்லை.

அங்கிருந்தவர்கள் ஸகருக்கு நிச்சயம் ஒரு வருடம்வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று பேசியதை அவர் கேட்க நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இது, அவருக்கு அச்சத்தைக் கொடுக்க, நீதிமன்ற வாயிலிலேயே தீக்குளித்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான ஈரானிய மக்கள், ``இரானை உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலக்கிவையுங்கள்" என்று மற்ற உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஈரானில் ஸஹர் விரும்பிய கால்பந்து அணியின் நிறம் நீலம், அதைவைத்து, `ஈரானின் நீலப் பெண்' என்று அவர் அழைக்கப்படுகிறார்.

ஈரானில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்குக் கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் தடை இருக்கிறது.

எழுதப்படாத இந்தச் சட்டம் மிகத் தீவிரமாக அந்நாட்டு அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்கின்றன, அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள்.

கடந்த ஆண்டு தெஹ்ரானில் உள்ள மைதானத்தில், உலகக் கிண்ணம் கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டபோது சில பெண்கள் மட்டும் அங்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்