மாதவிடாய் இரத்தக்கறையால் பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட மாணவி... அதன்பின் நடந்த சோகம்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மாதவிடாய் இரத்தக்கறையை காரணம் காட்டி பள்ளி ஆசிரியை அவமானப்படுத்தியதால், 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய தலைநகர் நைரோபியின் மேற்கே உள்ள கபியாங்கேக் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில், 14 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் சிறுமியிடம் நாப்கின் இல்லாததால் ஆடை முழுவதும் இரத்தக்கறைகள் படிந்துள்ளது. இதனை பார்த்த வகுப்பு ஆசிரியர் வகுப்பறையில் அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.

அசுத்தமான மாணவி எனக்கூறி உடனடியாக வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு ஆசிரியர் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி நடந்தவை குறித்து தன்னுடைய தாயிடம் வேதனையுடன் கூறியுள்ளார். பின்னர் தண்ணீர் குடிக்க செல்வதாக கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் 200 பேர் பள்ளி வளாகத்தின் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர்.

2017 ஆம் ஆண்டில், கென்யா பள்ளியில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் 'இலவச, போதுமான மற்றும் தரமான சுகாதார நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும்' என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் அப்படி இருந்தும் ஒரு சில பள்ளிகளில் இலவச நாப்கின்கள் கொடுக்கப்படுவதில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்