மாலி நாட்டில் ராணுவ சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலி நாட்டின் மெனாகா பிராந்தியத்தில் தீவிரவாதிகளால் இந்த கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மாலி நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் யயா சங்கரே, தமது டுவிட்டர் பக்கத்தில்,
தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த கொடூர தாக்குதலில் 53 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி பொதுமக்களில் ஒருவரும் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், என பதிவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. கடந்த மாதம் இதே போன்று தீவிரவாதிகள் முன்னெடுத்த தாக்குதலில் மாலி நாட்டில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.