வெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தின் கழிவறையில் அதிகாரிகள் கண்ட காட்சி! சிக்கியது என்ன தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டிலிருந்து வந்த விமானத்தை, விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தி கொண்டிருந்த போது, அதில் இருந்த கழிவறையில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

துபாயில் இருந்து ஏர்இண்டியா நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமானநிலையத்தில் இறக்கவிட்டதையடுத்து, குறித்த விமானம் காலை உள்ளூர் நேரப்படி 06.10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமானமாக புறப்பட இருந்தது.

இதற்காக விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் விமான ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது, விமானத்தில் கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து சுத்தப்படுத்தியுள்ளனர்.

அந்த தொட்டியில் கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் பேப்பரில், நான்கு பண்டல்கள் இருப்பதை கண்டுள்ளனர்.

இதனால் இது குறித்து விமானநிலைய மேலாளருக்கு தெரிவிக்க, அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து அந்த பிளாஸ்டிக் பையை பார்த்த போது, பிளாஸ்டிக் பார்சலில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

ஒவ்வொரு பார்சலிலும் தலா 12 தங்க கட்டிகள் என மொத்தம் 48 தங்க கட்டிகள் இருந்தன. இதன் மொத்த எடை 5.6 கிலோ எனவும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் வரும் என்று விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், சர்வதேச தங்க கடத்தல் கும்பல் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் சுங்கசோதனை மிக கடுமையாக இருப்பதாக கிடைத்த தகவலால் தங்கக்கட்டிகளை விமான கழிவறையில் விட்டுள்ளனர்.

இதே விமானம் மீண்டும் சென்னையில் இருந்து டெல்லி செல்வதை அறிந்து கடத்தல் ஆசாமி இதே விமானத்தில் ஏறி அந்த தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு டெல்லியில் உள் நாட்டு பயணியாக கடத்த திட்டமிட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்