இணையத்தில் சந்தித்த இளம்பெண்ணை சிறிய துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் வெட்டி வீசியதாக இளைஞர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருடைய எச்சங்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மார்ட்டா கால்வோ புரோன் (25) என்கிற இளம்பெண்ணுக்கு, ஆன்லைன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட கொலம்பிய போதைப்பொருள் வியாபாரி ஜார்ஜ் இக்னாசியோ பால்மா (37) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
நவம்பர் 7 ஆம் திகதி கிழக்கு கடற்கரை ஸ்பானிஷ் நகரமான வலென்சியாவுக்கு அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில் பால்மாவை சந்திக்க சென்ற மார்ட்டா திடீரென மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து மார்ட்டாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மார்ட்டாவின் செல்போனில் இருந்து அவரது தாய்க்கு அனுப்பப்பட்ட கடைசி குறுஞ்செய்தி, பால்மாவின் வாடகை வீட்டில் இருந்து சென்றிருப்பது சிக்னல் மூலம் தெரியவந்தது.
இதனையடுத்து விசாரணைக்காக பால்மாவின் வீட்டிற்கு பொலிஸார் சென்றிருந்துள்ளனர். ஆனால் மார்ட்டா மாயமான தினத்திலிருந்து பால்மாவும் அங்கிருந்து மாயமாகியிருப்பதும், அவர் இத்தாலி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றிருப்பதும் தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் அவரை தற்போது கைது செய்துள்ள பொலிஸார், பால்மா குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மார்ட்டாவை கொலை செய்து அவருடைய உடலை சிறு துண்டுகளாக நறுக்கி பல்வேறு இடங்களில் வீசியதாக கூறி பால்மா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.
இந்த நிலையில் அவருடைய உடலை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.