பிரம்படி தண்டனையின் போது மயங்கி தரையில் விழுந்த நபருக்கு சிகிச்சை கொடுத்து மீண்டும் அதிகாரிகள் தண்டனையை தொடர்ந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில் மதச் சட்டத்தை கடைபிடிக்கும் ஒரே பகுதி ஆச்சே ஆகும்.
சர்வதேச கண்டனங்கள் இருந்து வரும் நிலையிலும் கூட, சுமத்ரா தீவில் உள்ள பழமைவாத ஆச்சே பிராந்தியத்தில் சூதாட்டம், மது அருந்துதல் மற்றும் ஓரின சேர்க்கை அல்லது திருமணத்திற்கு முந்தைய உடலுறவு உள்ளிட்ட உள்ளூர் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட பல குற்றங்களுக்கு பிரம்படி தண்டனை கொடுப்பது பொதுவானதாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் வியாழக்கிழமையன்று 22 வயதான ஒரு நபர், திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணிடம் உறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட இருவருக்கும் 100 பிரம்படி தண்டனை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் அவருக்கு தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கும் போதே தரையில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவருக்கு லேசான மருத்துவ உதவி கொடுத்து, மீண்டும் தண்டனையை தொடர்ந்து நிறைவேற்றியுள்ளனர்.
இறுதியாக தண்டனை முழுவதும் நிறைவேறிய பின்னரே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.
அவரை போலவே சம்மந்தப்பட்ட பெண்ணுக்கும் 100 பிரம்படிகள் கொடுக்கப்பட்டுள்ளன.