நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: பிரதமர் ஜெசிந்தா வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

எரிமலை வெடிப்பு ஏற்பட்ட ஒயிட் தீவில் புதன்கிழமை தொடங்கி மீட்பு குழுவினர் செல்ல முடியும் என நம்புவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில் உள்ள எரிமலையில் நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது.

இதில் சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இருப்பினும் எரிமலை வெடிப்பில் சிக்கி 5 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே எரிமலை வெடிப்பில் சிக்கி மாயமான 8 பேரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இருப்பினும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

REUTERS/Charlotte Greenfield

இந்த நிலையில் எரிமலை வெடிப்பில் சிக்கிய 47 பேரும் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, சீனா, மலேசியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றவிசாரணை நடத்தப்படும் எனவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

மட்டுமின்றி எரிமலை வெடிப்பு தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருப்பதாக பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த நிகழ்வு தொடர்பாக பெரிய கேள்விகள் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

இந்த கேள்விகள் கேட்கப்பட வேண்டும், அவற்றுக்கு பதிலளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்