இனப்படுகொலை செய்ததாக கூறுவது தவறான குற்றசாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சாங் சூகி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் 'தவறானவை' என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி விளக்கம் கொடுத்துள்ளார்.

மியான்மரின் மேற்கு ராகைன் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து, அந்நாட்டு இராணுவம் ஒடுக்குமுறையை கையாண்ட போது, பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு, 7,30,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் மியான்மரை விட்டு வெளியேறினர்.

அவர்களில் தற்போது பெரும்பாலானவர்கள் பங்களாதேஷில் நெரிசலான அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.

உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியா ஐநா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில் உலகெங்கிலும் இருந்து 17 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் பேசிய மியான்மர் அரச ஆலோசகர் ஆங் சாங் சூகி (74), ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படும் காம்பியாவின் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. நிலைமை பற்றி அவர்கள் காண்பித்த படம் முழுமையற்றது எனக்கூறியுள்ளார்.

25 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையில், "ராகைன் மாநிலத்தின் நிலைமை சிக்கலானது மற்றும் புரிந்துகொள்ள எளிதானது அல்ல".

அங்கு உள்ள போராட்டக்காரர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போராளிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வாங்கியிருப்பதாக கூறினார்.

2016 அக்டோபரில் பங்களாதேஷின் எல்லைக்கு அருகிலுள்ள காவல் நிலையங்களைத் தாக்கியபோது ஆரம்ப கட்ட வன்முறை தொடங்கியது. இதில் ஒன்பது பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே இராணுவம் ஒடுக்குமுறையை கையாண்டது. "துன்பகரமாக, இந்த ஆயுத மோதலானது ராகைனின் மூன்று வடக்கு நகரங்களிலிருந்து பங்களாதேஷுக்கு பல லட்சம் முஸ்லிம்கள் வெளியேற வழிவகுத்தது. குரோஷியாவில் [1990 களில்] ஆயுத மோதல்கள் நடைபெற்ற போது பெருமளவில் பொதுமக்கள் வெளியேறியதை போல".

போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால், அவை மியான்மரின் நீதி அமைப்பால் கையாளப்படும். ஒரு சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் தூக்கிலிடப்பட்டதற்காக வீரர்கள் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

அதேபோல, இனப்படுகொலை நடத்தும் நோக்கம் குறித்த பிரச்னையை காம்பியா சரியாக கவனிக்கவில்லை என்றும், 10,000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்டது என்றும் மியான்மர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ் கூறினார்.

முன்னதாக ஆங் சாங் சூகி, மியான்மரில் ஜனநாயகம் மலரவேண்டி போராட்டம் நடத்தியதால் அந்நாட்டு இராணுவத்தால் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு உட்பட பல்வேறு நாட்டு விருதுகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...