போருக்கு தயாராகும் அமெரிக்கா? ஆயிரக் கணக்கான வீரர்கள் குவிப்பு: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஈரானிய சார்பு கும்பல் ஒன்றால் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்கு இரையான நிலையில் அமெரிக்கா போருக்கு தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்திருந்த டொனால்டு டிரம்ப், ஈரான் இதற்கு மிகப்பெரிய விலையை தரவேண்டி இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் செவ்வாய் அன்று அமெரிக்க ராணுவத்தின் 82-வது பாராசூட் பிரிவு வீரர்களை தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 750 வீரர்கள் குவைத் நோக்கி பயணப்பட்டுள்ளதாகவும் மேலும் 4,000 வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கையானது அமெரிக்க பணியாளர்கள் மற்றும் அவர்களின் உடமைகளுக்கு எதிரான அதிகரித்த அச்சுறுத்தல் நிலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட பொருத்தமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 96 மணி நேரத்தில் மொத்தம் 4,000 வீரர்கள் குவைத்தில் சென்று சேர்வார்கள் எனவும், அங்கிருந்து அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் எஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில் செவ்வாயன்று, சுமார் 6,000 ஈரான் சார்பு ஷியா போராளிகள் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி, சுவர்களுக்கு நெருப்பு வைத்தனர்.

மேலும் 'அமெரிக்காவிற்கு சாவு உறுதி' என முழக்கங்கள் எழுப்பினர். இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

இதனிடையே சுமார் 100 கடற்படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டதை அடுத்து ஷியா போராளிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்