குவாசிம் இறுதிச் சடங்கிலும் தாக்குதல்... ஈரானுடன் போர் மூளும் அபாயம்! அமெரிக்க படைகள் குவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரான் தளபதி குவாசிம் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதையடுத்து அவரின் இறுதிச்சடங்கிலும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால், இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதல் மூலம் ஈரானின் சக்திவாய்ந்த ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதனால் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையே இருக்கும் உறவு படிப்படியாக மோசமடைந்து வருகிறது. ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவ படை மீது ஈரான் ஆதரவு கிளர்ச்சி படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் சமீபத்தில் சூறையாடப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை நடத்திய விசாரணையில், ஈராக்கை சேர்ந்த ஹசத் அல் ஷாபி துணை ராணுவப் படையும், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையும் இணைந்து அமெரிக்க தூதரகத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக தெரிந்தது.

இவ்விரண்டு படையும், ஈரானுக்கு மிக நெருக்கமானவை. மேலும், அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஈரான் இராணுவத்தின் துணை படையான புரட்சிகர பாதுகாப்பு படையின் குத்ஸ் பிரிவும், கிளர்ச்சி படைகளுடன் சேர்ந்து அமெரிக்க மக்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் உளவுத் தகவல்கள் கிடைத்தன.

Photo: Press Office of Iranian Supreme Leader/Anadolu Agency/Getty Images

அதன் பின்னரே ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் இராணுவ தளபதியும், மத்திய கிழக்கின் நாடுகளின் சக்தி வாய்ந்த நபருமான குவாசிம் சுலைமான், ஹசத் அல் ஷாபியின் துணை தலைவர் அபு மகதி அல் முகான்திஸ் மற்றும் அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தீவிரவாதி உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு நிச்சயம் பழிவாங்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று மீண்டும் ஒரு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கொல்லப்பட்ட சுலைமானி மற்றும் அபு மகதியின் இறுதிச் சடங்கு ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள நாப்பில் நடைபெற்றது. அப்போது, அமைதி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.

CREDIT: SABAH ARAR/AFP VIA GETTY IMAGES

அப்போது, கார் அணிவகுப்பில் திடீரென ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசப்பட்டன. இதில் ஏராளமான கார்கள் தீப்பிடித்தன.

இத்தாக்குதலை அமெரிக்கா நடத்தியதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

உலக நாடுகள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அடுத்தடுத்த நாட்களில் ஈராக்கில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதால் போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது.

KHALID MOHAMMED – ASSOCIATED PRESS

இதனால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளில் தனது படையை அதிகரித்து வருகிறது. ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக 750 இராணுவ வீரர்களை பாக்தாத்துக்கு அனுப்பிய அமெரிக்கா, சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கூடுதலாக 3,500 வீரர்களை குவைத்துக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்