அர்ஜெண்டினாவில் பேருந்தில் பயணிக்கும்போது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, மூன்று பொலிசார் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.
பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண் பேருந்தில் பயணிக்கும்போது எதிர்பாராமல் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த பொலிசார் மூவர் பேருந்தில் ஏற, ஓடும் பேருந்திலேயே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
பேருந்திலிருந்த பயணி ஒருவர் எடுத்த வீடியோவில், திடீரென பேருந்தில் பிரசவித்த அதிர்ச்சியில் அந்த இளம்பெண் கால்களை மார்புடன் சேர்த்து வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, பொலிசார் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோல் ஒன்றின் உதவியுடன் வெட்டுவதைக் காணலாம்.
குழந்தை வீறிட்டு அழ, அதை தூக்கவேண்டும் என்ற எண்ணம் கூட வராமல் திகைத்துப்போய் அதன் தாய் அமர்ந்திருக்க, ஆண் பொலிசார் ஒருவர் அந்த குழந்தையை தாலாட்டுகிறார்.
பின்னர் குழந்தையை அந்த இளம்பெண்ணிடம் கொடுக்க, அவர் அதை மார்போடு அணைத்துக் கொண்டிருக்கிறார்.
3.3 கிலோகிராம் எடையுள்ள அந்த குழந்தை ஒரு பெண் குழந்தையாகும்.
பின்னர், பதற்றம் நீங்கிய அந்த தாய் அந்த குழந்தைக்கு Milagros (miracles), அதாவது அற்புதம் என பெயர் வைத்துள்ளார். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.