உடல் கருகி பலியான பயணிகள்... ஏவுகணை தாக்குதலில் சிக்கிய விமானங்கள்: வெளியான முழு தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
502Shares

ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே மூண்ட போர் பதற்றத்தின் இடையே விபத்தில் சிக்கிய உக்ரேன் பயணிகள் விமானம் தொடர்பில் தற்போது உலக நாடுகள் பலவும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

குறித்த விமானமானது கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது என முதற்கட்ட தகவல் வெளியாகியிருந்த நிலையில்,

தற்போது ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

அந்தவகையில், கடந்த 40 ஆண்டுகளில் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான பயணிகள் விமானங்களின் மொத்த தகவல் வெளியாகியுள்ளது.

1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரிப்போலியில் இருந்து கெய்ரோவுக்கு பறந்து கொண்டிருந்த லிபிய அரபு விமானம் ஒன்று சினாய் பாலைவனத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் 108 பயணிகள் கொல்லப்பட்டனர். விமானம் தரையிறங்க மறுத்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1983 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி தென் கொரிய பயணிகள் விமானம் சோவியத் போர் விமானங்களால் சகலின் தீவின் மீது சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் சுமார் 269 பயணிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு தென் கொரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக சோவியத் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

1988 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணம் நோக்கி புறப்பட்டு சென்ற ஈரான் விமானம் ஒன்று அமெரிக்க ஏவுகணை தாக்குதலுக்கு இரையானது.

இதில் பயணம் மேற்கொண்ட 66 சிறார்கள் உள்ளிட்ட 290 பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

போர் விமானம் என கருதியே ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்ததாக அப்போது அமெரிக்கா விளக்கமளித்தது. மட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு $101.8m தொகையை இழப்பீடாக வழங்கியது.

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி ரஷ்ய விமானம் ஒன்று கருங்கடல் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் மேற்கொண்ட 78 பேர் கொல்லப்பட்டனர்.

ஒரு வார காலத்திற்கு பின்னர் தவறுதலாக ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டதாக உக்ரேன் அரசு மன்னிப்பு கோரியது.

2007 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி சோமாலிய தலைநகர் மொகாடிஷுவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெலாரஷ்ய விமானம் ஒன்று ராக்கெட் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு 11 பேர் கொல்லப்பட்டனர்.

2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச் 17 ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு செல்லும் வழியில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த கிழக்கு உக்ரைன் பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் இருந்த 298 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 193 டச்சு நாட்டினர் பயணம் மேற்கொண்டதாக பின்னர் தெரியவந்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்