ஈரானிய பெண்மணி ஒருவர் வெளிநாட்டில் முக்காடு அணிந்து கொள்ளாததால் நாட்டு திரும்பியதும் கைதாகும் நிலை ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
ஈரானியரான 32 வயது ஷோஹ்ரே பயாத் ஷாங்காய் நகரில் நடந்த மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடுவராக கலந்து கொண்டார்.
சர்வதேச விளையாட்டுப் போட்டி ஒன்றில் நடுவராக ஷோஹ்ரே பயாத் கலந்து கொள்வது இதுவே முதன் முறை.
ஆனால் இவரது சாதனையும் இந்த கொண்டாட்டங்களும் தற்போது இவரது ஒற்றைப் புகைப்படத்தால் தலைகீழாக மாறியுள்ளது.
ஈரானுக்கு திரும்பினால் கைதாகலாம் என்ற சூழலும் உருவாகியுள்ளது. ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளை பொறுத்தமட்டில்,
உள்ளூரில் அணிந்து கொள்ள வலியுறுத்தப்படும் அதே உடைகளையே வெளிநாட்டிலும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதன்படி ஷோஹ்ரே பயாத் சம்பவத்தன்று முக்காடு அணியாமல் போட்டி நடுவராக செயல்பட்டுள்ளார். இவரது இந்த புகைப்படமானது ஈரான் செய்தி ஊடகங்களில் இடம்பெற்றுள்ளதுடன்,
பெண்கள் முக்காடு அணிவதற்கு எதிராக ஷோஹ்ரே பயாத் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானில் நடைமுறையில் இருக்கும் இஸ்லாமிய சட்டத்தை தாம் மதிப்பதாக கூறும் அவர், இதுவரை வெளிநாட்டு பயணங்களில் அதை கடைபிடித்தும் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பணி நிமித்தம் ரஷ்யாவில் இருக்கும் ஷோஹ்ரே பயாத், பொதுமக்களுக்கு, அவர்கல் விரும்பும் அல்லது வசதிக்கு ஏற்ற உடைகளை அணிந்து கொள்ளும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இதுபோன்ற கடும்போக்கு சட்டங்களை தாம் சகித்து வாழ்ந்து வருவதாகவும், தமக்கு வேறு வழி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஈரான் அரசுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதும்படி ஈரானின் செஸ் கூட்டமைப்பு அவருக்கு அறிவுறுத்தியது.
ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ஈரானுக்கு திரும்பிச் செல்வது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.