தூக்கு தண்டனையில் இருந்து தப்பிய முஷரப் விவகாரம்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் சட்டத்தின் முன் சரண் அடைந்தால் மட்டுமே, அவரின் கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் அதிபராக இருந்த போது, பர்வேஸ் முஷாரப் அரசுக்கு எதிராக, கடந்த 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் திகதி அவசர நிலை பிரகடனம் செய்தார்.

அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவர் சிறையில் அடைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், இதை எதிர்த்து அவர் மீது கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, முஷராப் 2016-ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றுவிட்டார். அதன் பின் அவர் அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பவில்லை.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் திகதி

தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்தது.

அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட மறு சீராய்வு மனுவை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம் பர்வேஸ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என்று லாகூர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதாகவும், அந்த தீர்ப்பு செல்லுபடியாகும் என்றும் சில சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முஷாரப் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அதில் முஷாரப் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முஷாரப் சார்பில் அவரது வழக்கறிஞர் சல்மான் சப்தார் இந்த 90 பக்க மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் அதிபர் முஷாரப் முதலில் சட்டத்தின் முன்பு சரணடைய வேண்டும். அதன் பிறகுதான் அவர் மேல்முறையீடு செய்ய முயல வேண்டும். எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது.

மேலும் நீதிமன்றம் தெரிவித்துள்ளபடி ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால், மேல்முறையீடு செய்யும் உரிமையை அவர் இழந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்