துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடர்பாடுகளில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவர், 12 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
துருக்கியின் எலாசிக் மாகாணம் மற்றும் அண்டை நகரான மாலத்யாவில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.55 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்வேறு பூகம்ப கண்காணிப்பு மையங்கள் ரிக்டர் அளவில் 6.5 முதல் 6.8 வரை பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளன.
அண்டை நாடுகளான சிரியா, ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் சிவ்ரிஸில் குறைந்தது ஐந்து கட்டிடங்களும், மாலத்யா மாகாணத்தில் 25 கட்டிடங்களும் அழிக்கப்பட்டன. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான பிற கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவத்தில் தற்போதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 1030 பேர் காயமடைந்துள்ளனர். இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் 28 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இடர்பாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் 12 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார்.
நேற்றைய நிலநடுக்கத்திற்கு பின்னர் அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா எச்சரித்துள்ளார்.