இலங்கையை தொடர்ந்து சீனாவில் சிக்கித்தவிக்கும் குடிமக்களை மீட்க தயாரான அமெரிக்கா, ரஷ்யா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் சிக்கித்தவிக்கும் 30 இலங்கை மாணவர்களை மீட்க தயாராக இருப்பதாக இலங்கை அரசு அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலே, அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது குடிமக்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது.

சீனாவில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவை அடைந்துளளது. மேலும், பிரான்சில் மூன்று பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த கொடிய வைரஸ் தாக்குதலால் 41 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு மருத்துவர்கள் சீன மருத்துவமனையில் சிகிச்சையளித்துக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் வைரஸ் தாக்குதல் காரணமாகவும், மற்றொருவர் சோர்வு காரணமாக உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக கிட்டத்தட்ட 20 நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வுஹான் நகரத்திற்கு சென்றவர்களும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சகம், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஹூபே மாகாணத்தின் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

மேலும், அங்கிருக்கும் 30 எண்ணிக்கையிலான மாணவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் பிற நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து மீட்கும் பணி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

அதேபோல சீனாவில் சிக்கியிருக்கும் 230 அமெரிக்க குடிமக்கள் மற்றும் தூதர்களை ஒரு பட்டய விமானத்தில் வெளியேற்றவும், நகரத்தில் உள்ள அதன் தூதரகத்தை தற்காலிகமாக மூடவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து சீனாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களிடமிருந்து இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்காவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து, வுஹானில் இருந்து குடிமக்களை வெளியேற்ற சீனாவுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ரஷ்யர்கள் யாரும் இல்லை என சீன தூதரகத்தின் பத்திரிகை இணைப்பை மேற்கோள் காட்டி அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்