மனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வியாதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரில் இருந்து தங்கள் சீனத்து மனைவியை விட்டுவர பிரித்தானியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் சிக்கியுள்ள பிரித்தானியர்களுடன் வியாழக்கிழமை சிறப்பு விமானம் ஒன்று பிரித்தானியா திரும்புகிறது.

அங்கிருந்து அழைத்து வரப்படும் பிரித்தானியர்களை ராணுவ முகாம் ஒன்றில் தங்க வைத்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வுஹான் நகரில் ஆசிரியராக பணியாற்றும் ஜெஃப் சிடில் தமது சீனத்து மனைவியை விட்டுப்பிரிந்து தமது 9 வயது மகள் ஜாஸ்மினுடன் பிரித்தானியா திரும்ப உள்ளார்.

சீனா அரசாங்கம் சிடிலின் மனைவியை அவருடன் பிரித்தானியாவுக்கு அனுப்ப மறுத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சீனத்து குடிமகளான தமது மனைவிக்கு பிரித்தானியாவில் நிரந்தர குடியிருப்பு விசா இருப்பதாக கூறும் சிடில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம், பிரித்தானியர்களை மட்டுமே வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது பரிதாபமான சூழல் என தெரிவித்துள்ளார்.

இக்கட்டான இந்த நிலையில் மனைவியை மரணத்திற்கு தள்ளுவது போல உள்ளது இது என சிடில் கண்கலங்கியுள்ளார்.

தாயாரை விட்டுப்பிரியும் தமது 9 வயது மகளின் நிலை குறித்து அரசாங்கம் யோசனை செய்யவும் இல்லை என கூறும் சிடில்,

தகவல் அறிந்த பின்னர் இதுவரை அவள் அழுகையை நிறுத்தவில்லை எனவும் சிடில் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் தாம் சீனாவுக்கு சென்ற போது அரசு தரப்பில் எந்த சுகாதார எச்சரிக்கையும் இல்லை என கூறும் சிடில்,

ஆனால் தற்போதைய நிலைமை 'கொடூரமானது' என்று குறிப்பிட்டுள்ளார். சிடில் மட்டுமின்றி மேலும் மூன்று பிரித்தானியர்கள் தங்கள் சீனத்து மனைவியை வுஹான் விட்டுவிட்டு பிரித்தானியாவுக்கு திரும்பும் நிலை உள்ளது.

இதனிடையே அரசு வெளியிட்ட தகவலின்படி கொரோனா வியாதிக்கு மூல காரணமாக அமைந்துள்ள வுஹான் நகரில் மட்டும் 200 பிரித்தானியர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், வெளியேற்றப்படும் அனைவரும் பிரித்தானியாவில் ரகசிய முகாம் ஒன்றில் தங்க வைத்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும், அதற்காக அவர்களிடம் இருந்து ஒப்புதலும் வாங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers