உயிரைக் காப்பாற்ற இதயத்தை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது! ஒருவர் கவலைக்கிடம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஜப்பானில் புகு‌ஷிமாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று மூளை சாவு அடைந்தார். இதனால் அவரது இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்திக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் அளித்தனர்.

இதையடுத்து அவரது இதயத்தை அகற்றி, டோக்கியோவில் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டதால், மருத்துவர்கள் அவரது இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

அந்த இதயத்தை விரைவாக கொண்டு போய்ச்சேர்ப்பதற்காக பொலிசார் ஹெலிகாப்டரில் எடுத்துச்சென்றனர். அந்த ஹெலிகாப்டரில் 3 பொலிஸ் அதிகாரிகள், 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், 2 மருத்துவ பணியாளர்கள் என 7 பேர் இருந்தனர்.

ஆனால் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக கொரியாமா என்ற இடத்தில் உள்ள நெல் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானதால், விமானத்தில் இருந்த 7 பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்பு குழுவினர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனையில் நடைபெற இருந்த இதய மாற்று அறுவை சிகிச்சையும் ரத்தானது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்