கொரோனா பீதியால் மாணவர்களை கைவிட்ட அரசு.. சீனாவிலேயே தங்க கோரிக்கை: கொந்தளித்த மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வியாதி தாக்குதலுக்கு உள்ளான வுஹான் நகரில் இருந்து மாணவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என சீனாவிடம் கேட்டுக்கொண்டதாக பாகிஸ்தானிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியான நிலையில் அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உலக நாடுகளை பீதிக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் 304 பேர் பலியாகியுள்ளனர்.

சுமார் 14,380 பேர் வைரஸ் பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிக்கப்பட்ட நிலையில் வுஹானில் சிக்கிய வெவ்வேறு நாட்டின் மாணவர்கள்,

தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டவர்களை உரிய நாடுகள் திரும்ப அழைத்துக்கொள்ள சீனா தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறது.

ஆனால், இதில் மாறுபட்ட முடிவை பாகிஸ்தான் எடுத்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஜாபர் மிர்சா, தங்கள் நாட்டு மாணவர்களை திரும்ப அழைக்கப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஊடக உரையாடலில், சீனாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட பாகிஸ்தான் குடிமக்கள்,

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நோயிலிருந்து விடுபடுவதாகக் கண்டறியப்படும் வரை அவர்கள் திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வுஹானில் சிக்கிய மாணவர்கள் நாட்டுக்குள் வரவேண்டாம். அவர்களுக்கு சீனாவே சிறந்த சிகிச்சையளிக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.

இந்த முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான். அதில் உறுதியாக இருக்கவே பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் இப்போது மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. இந்த வைரஸ் பாதிப்புள்ள ஒரு நபரால் பலபேருக்கு நோய்த் தொற்றக்கூடிய அபாயம் உள்ளது.

உலக சுகாதார அமைப்பு அக்கறையோடு இந்த நிலைமையை சர்வதேச நெருக்கடி நிலை என்றே அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஒரு பொறுப்புள்ள தேசம். நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசினார்.

அப்போது சீனாவிலிருந்து பாகிஸ்தான் குடிமக்களைத் திருப்பி அனுப்பவேண்டாம் என்பதுதான் எங்கள் அரசின் இறுதி முடிவு. இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான பீஜிங்கின் கொள்கைகளில் அரசாங்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சீனாவும் அங்கு பாகிஸ்தான் குடிமக்களை கவனித்துக்கொள்வது சீனாவின் அரசாங்கத்தின் முன்னுரிமை என்று உறுதியளித்தது என்றார் ஜாபர் மிர்சா.

இதனிடையே அண்டை நாடான இந்திய மாணவர்கள் வுஹானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டபோது,

விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்து அருகே பாகிஸ்தான் மாணவர்கள் ஏக்கத்துடனும், கண்ணீருடனும் நின்றிருந்த காட்சிகள் பரிதாபமாக இருந்தது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்