8 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட கொரோனா வியாதிக்கான மருத்துவமனை: வெளியான புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா நோயாளிகளுக்கான 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வெறும் 8 நாட்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் அந்த மருத்துவமனை தொடர்பிலும், அதன் வசதிகள் குறித்தும் புகைப்படங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பானது கொரோனா வியாதியின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து உலக அவசரநிலை அறிவிப்பை வெளியிட்டது.

இதனையடுத்து நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வுஹானில் கட்டப்பட்ட இரண்டு புதிய மருத்துவமனைகளில் 269,000 சதுர அடி கொண்ட கட்டிடத்தில் ஒன்று தற்போது செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

SARS வைரஸை சமாளிக்க பீஜிங்கில் 2003 இல் கட்டப்பட்ட மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்டு தற்போது இந்த புதிய கட்டிடங்களுக்கான வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலுமிருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி இந்த மருத்துவமனையானது மற்ற மருத்துவமனைகளில் இருந்து பொருட்களை வரவழைத்துக் கொள்ளவும் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து ஆர்டர் செய்யவும் அனுமதிக்கப்படும்.

குறித்த மருத்துவமனையானது சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 1,400 இராணுவ மருத்துவர்கள் மக்கள் விடுதலை இராணுவத்திலிருந்து புதிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இங்கு பணியாற்றவிருக்கும் பெரும்பாலான மருத்துவர்கள், கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் சீனாவில் 650 பொதுமக்களை பலிகொண்ட SARS வைரஸ் காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்